தனியார் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பிறந்து சில மணிநேரங்களே ஆன 8 குழந்தைகள் உயிரிழந்துள்ள சோக சம்பவம் அல்ஜீரியாவில் நடந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எல் உயேத் மாகாணத்தின் தலைநகரான எல் உயேத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நேற்று திடீரென பயங்கரமாக தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென அருகிலிருந்த மகப்பேறு பிரிவிற்கு பரவியது.
அப்பகுதி முழுவதும் தீயினால் சூழப்பட்ட நிலையில், 107 பெண்கள், 19 குழந்தைகள் மற்றும் 28 மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் உள்ளேயே சிக்கினர். பின்னர் அங்கிருந்தவர்கள் பெரும் முயற்சியால் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், பிறந்து சிலமணிநேரமே ஆன 8 பச்சிளம் குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பிறந்த சிலமணிநேரத்திலேயே 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.