உலகமே எதிர்நோக்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் முதன்முதலாக வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள 'நியூ ஹாம்ப்ஷையர்' கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ், குடியரசுக் கட்சி சார்பில் மைக் பென்ஸ் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப், ஜோ பைடன் உள்பட சுமார் 9.2 கோடி பேர் முன்னதாக வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் தேர்தலின்போது முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி சுமார் 9.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்?
அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாகாணத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எலெக்டர்களே அதிபரை தேர்வு செய்வர்.
எலெக்டர்களைக் கொண்ட அமைப்பே ’எலக்டோரல் காலேஜ்’ (தேர்தல் அவை) என்று அழைக்கப்படுகிறது. தேர்தல் நாளில் மறைமுகமாக தேர்தல் அவை உறுப்பினர்களையே மக்கள் தேர்வு செய்கின்றனர்.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும். தேர்தல் அவையின் மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில் 270 பேரின் வாக்கினை பெறுவோரே அதிபராகும் வாய்ப்பை பெறுவர். ஒருமாகாணத்தில் ஒரு வேட்பாளர் பெரும்பான்மை மக்களின் வாக்கைப் பெற்றால், தேர்தல் அவை வாக்கும் அவருக்கே சேரும். தேர்தல் முடிந்த பின் தேர்தல் அவை உறுப்பினர்கள் வாக்களித்து அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள்.
பொதுத் தேர்தலுக்கு மறுநாளே வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்; புதிய அதிபர் ஜனவரி 20- ஆம் தேதி பதவியேற்பார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்விக்கு நாளை (04/11/2020) பதில் கிடைத்துவிடும்.