Skip to main content

“கள்ளக் கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக” - அமைச்சர் ரகுபதி பதிலடி

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

Raghupathi retorts AIADMK is playing double role to save fake alliance

தமிழக தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது ‘அனைத்துக் கட்சி கூட்டம் திமுகவின் நாடகம்’ என்று விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில் தனது கள்ளக் கூட்டணியைக் காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தொகுதி மறுசீரமைப்பின் பெயரால்  தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதலமைச்சரின் முன்னெடுப்பிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார். தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து  தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனைச் சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா?
 
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது. பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை. முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு போராடும், தனது உரிமையை வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்