ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் எனக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், கிழக்கு ஐரோப்பாவிற்குப் படைகளையும், போர்க் கப்பல்களையும் அனுப்பியது.
இந்தச்சூழலில் ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவோ ரஷ்யா படைகளைக் குறைக்காமல் அதிகரித்திருப்பதாகவும், உக்ரைன் மீது படையெடுக்கக் காரணத்தை உருவாக்க முயல்வதாகவும், ரஷ்யப் படைகள் போருக்குத் தயாராகி வருவதாகவும் குற்றஞ்சாட்டியது. இந்தச்சூழலில் உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளையும், ரஷ்ய ஆதரவுப் பெற்ற கிளர்ச்சியாளர்களின் பகுதிகளையும் பிரிக்கும் எல்லைக் கோடுகளில் மோதல் அதிகரித்துள்ளன. தங்கள் பகுதிகளில் அரசு தாக்குதல் நடத்துவதாகக் கிளர்ச்சியாளர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதேசமயம் ரஷ்ய இராணுவம் புதினின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சியை மேற்கொண்டது. இது பதற்றத்தை அதிகரித்த நிலையில், மேக்ரான் போரைத் தவிர்க்கும் முயற்சியாக புதினிடம் தொலைபேசி பேசினார். அப்போது ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட ஒரு உயர்மட்ட கூட்டத்திற்குப் பரிந்துரை செய்தார். இதற்கு புதின் சம்மதம் தெரிவித்தார். மேலும், ரஷ்யா, உக்ரைனைத் தாக்காதபட்சத்தில் புதினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புக்கொண்டார். இதனால் விரைவில் புதினும், ஜோ பைடனும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ரஷ்யா, உக்ரைனிலிருந்து வீசப்பட்ட குண்டு, தங்களது பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் பயன்படுத்திய எல்லை சாவடியை அழித்துவிட்டதாகக் கூறியது. இது பதற்றத்தை அதிகரித்த நிலையில், உக்ரைன் இராணுவம், தாங்கள் ரஷ்யாவின் எல்லை சாவடியைத் தாக்கவில்லை எனவும், ரஷ்யா கூறியது பொய் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைனிலிருந்து தங்கள் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை சுட்டுகொன்றுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஊடுருவ முயன்றவர்கள் யார், அவர்கள் எதற்காக ஊடுருவ முயன்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. இது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.