இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 8 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்து அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரை விட ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொள்ளப்படுவதாக ஐ.நா கலவை தெரிவித்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளாக காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கி கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பில் உள்ள கடைசியாக இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல், காசா அருகே உள்ள பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் முகாமிற்குள் நேற்று அதிரடியாக உள்ளே நுழைந்து 250 பிணைக் கைதிகளை மீட்டனர். மேலும் 25 ஹமாஸ் அமைப்பினரையும் சிறைபிடித்து இஸ்ரேலுக்கு கொண்டு சென்றது ராணுவ கமாண்டோ படை.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிணைக்கைதிகள் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரைத் தொடர்ந்து, தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சரும் இஸ்ரேலுக்கு வந்துள்ளார். அவர் தாக்குதல் குறித்த ஆலோசனைகளை இஸ்ரேலுக்கு வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் அசுரன் என்று சொல்லப்படும் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிய கப்பலான யூ.எஸ் ஜெரால்ட் போர்ட் இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மெடிட்டரினியன் கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது.