சீனாவின் வூஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மது குடித்தால் கரோனா வைரஸ் தாக்காது என்று பரவிய வதந்தியால் ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் 7000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மது குடித்தால் கரோனா வராது எனப் பரவிய வதந்தியால் 200க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். மெத்தனால் கலப்பில் ஏற்பட்ட தவறு காரணமாகக் கள்ளச்சாராயம் விஷமாகியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷ சாராயத்தைக் குடித்த 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 218 பேர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.