கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 -ஐ கடந்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 80 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3012 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று புதிதாக 139 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.