நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். அப்பகுதியில் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தவித்து வந்தார். கண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் பானு இவர் பாப்பம்பாளையம் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தார், பேக்கரிக்கு வந்து சென்றதால் சுகுமாருக்கும் நாகூர் பானுவிற்கும் நட்பு ஏற்பட்டது. தனது கடன் குறித்து நாகூர் பானுவிடம் சுகுமார் தெரிவித்துள்ளார். அப்போது யூ-டியூப் இணையதளத்தில் கள்ளநோட்டு எப்படி தயாரிப்பது என்பது குறித்து தான் பார்ததாகவும், அதேபோல் நாமும் கள்ள நோட்டு தயாரிக்கலாம் என சுகுமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து யூ-டியூப்பில் வீடியோ பார்த்த சுகுமார் கள்ளநோட்டு தயாரிப்பதற்கான கருவிகளை வாங்கியுள்ளார். இக்கருவிகளை இயக்குவதற்கு ஆவாராங்காடு, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சக்தி(எ)சந்திரசேகரிடம் கேட்டுள்ளனர். சக்தி கருவிகளை இயக்குவதற்கு பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் கள்ளநோட்டு தயாரிக்க சக்தியிடம் கேட்டுள்ளனர்.
சக்தி அங்கிருந்து நைசாக வெளியே சென்றுவிட்டார். சுகுமார் சக்தியை மீண்டும் அழைத்தபோது வரமறுத்துள்ளார். தன்னிடம் உள்ள கம்ப்யூட்டர் பழுதடைந்துவிட்டதாகவும் அதனை சரி செய்து தரமட்டும் வந்துவிட்டு செல்ல சுகுமார் கேட்டுள்ளார். இதனையடுத்து பாப்பம்பாளையம் வந்த சக்தியை பிடித்து அடைத்து வைத்துள்ளனர். அவரை மிரட்டி கள்ளநோட்டு தயாரித்துள்ளனர். இதனையடுத்து தன்னை மிரட்டி அடைத்து வைத்துள்ளதாகவும், கள்ளநோட்டு தயாரிக்கப்படுவதாகவும் சக்தி வாட்சாப் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் வாட்சாப் மூலம் சக்தி அனுப்பியிருந்த லோக்கேசனுக்கு சென்று அங்கிருந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு அச்சடிக்கப்பட்டிருந்த 400 நூறு ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்ததுடன் அங்கிருந்த சக்தி,சுகுமார், நாகூர் பானு மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். நவீன விஞ்ஞானம் வளர்ந்ததில் சட்டவிரோத செயல்பாடுகளும் அதன் மூலம் வளரத்தான் செய்கிறது.