பா.ஜ.க. வின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது,
நாளை ஈரோடு மாவட்டம் சித்தோட்டுக்கு இரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா காலை 11 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வர இருக்கிறார். திருப்பூரில் சென்ற 10 ந் தேதி நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் பல்வேறு பகுதியில் இருந்தும் பா.ஜ.க. தொண்டர்கள் வந்திருந்தனர். இது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தற்போது அமித்ஷா ஈரோடுக்கு வருகிறார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற பரபரப்பான சூழ்நிலையில் அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது ம.தி.மு.க. தலைவர் வைகோ கறுப்புக்கொடி காட்டுவதின் மூலமாக அவர் சிறிது சிறிதாக தனது மரியாதையை இழந்து வருகிறார். வைகோ எம்பியாக இருந்த காலத்தில் இருந்தே எந்த ஒரு நல்ல விஷயமும் அவர் செய்யவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டினார். முன்பு பெரும் தலைவராக இருந்த வைகோ தற்போது சின்னச்சின்ன குழுக்களின் தலைவராக சுருங்கி விட்டது வேதனை அளிக்கிறது. இந்த வைகோதான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சிசனைகளை பிரதமர் மோடி தீர்த்து வைத்துள்ளார். வேறு வழியில்லாமல் வைகோ கருப்பு கொடி காட்டி வருகிறார்.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தனது முதற்கட்ட நிவாரண நிதியை வழங்கியுள்ளது மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதான் வருகிறது என்ற அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதி தரவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நிதியை பொறுத்தமட்டில் தேசிய அளவில் அதற்கு என்று ஒரு வரையறை உள்ளது அது பொருத்துதான் நிதி வழங்க முடியும். நிதியை பொருத்தவரை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இரண்டு பிரிவுகள் மூலம் வழங்க முடியும். என்ற வானதி குழப்பமான பதிலை கூறினார். தமிழ்நாட்டில் எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜக பலமான வெற்றிக் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கும்." என்றார்.
அது என்னங்க எல்லாரும் எதிர்பார்த்ததுதான, அ.தி.மு.க.னு சொல்லுங்களே என செய்தியாளர்கள் கமென்ட் அடிக்க எதையும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்கள் சொல்வார்கள் பிரதர்ஸ் என உடன் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் இரட்டை விரலை காட்டி கலகலப்பாக பேசினார்கள்.