நாகையில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுவரும் டி.டி.வி.தினகரன் மூன்றாவது நாளான இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார், அப்போது திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அதிமுகவை டெபாசிட்கூட வாங்க விடமாட்டோம் என ஆவேசமாக சபதமிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தை 3-வது நாளாக திருபூண்டியில் இன்று மாலை தொடங்குகிறார். அதற்கு முன்னதாக வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"ஈழதமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பற்றி பேசாமல் என்னை பற்றியே பேசியது அனைத்து அமைச்சர்களின் பயத்தையே காட்டுவதாக தெரிகிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் கூட வாங்காது, வாங்கவும் விடமாட்டேன். அமைச்சர் காமராஜ் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டால் டெப்பாசிட் கூட வாங்கமாட்டார். இடைத்தேர்தலில் போட்டியிட விஜயபாஸ்கர், துரைகண்ணு, காமராஜ், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்டவர்களுக்கு சவால்விடுகிறேன் போட்டியிடதயாரா?
தமிழக அமைச்சர்கள் 33 பேரை எக்காரணம் கொண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்க்கமாட்டோம். சேர்த்தால் அதைவிட பாவம் எதுவும் இல்லை. சென்னையில் நடைபெற இருக்கும் எம்ஜி.ஆர் நூற்றாடு விழாவில் நான் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை எனவும், என் பெயரை அரசியல் செய்வதற்காக போட்டுள்ளார்கள் என்றும் முடித்தார்.