திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி அருகே போலீசார் நேற்று இரவு 11 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த பால்பாண்டி என்பவர் மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை நடத்தியதில் பால் பாண்டி மது அருந்தியது தெரியவந்தது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்ததால், அவரது இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பால் பாண்டி தனது அண்ணன் மருதுபாண்டியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் மருது பாண்டியும் மது போதையில் இருந்துள்ளார். இதனால் பால்பாண்டி கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த மருது பாண்டி தனது சரக்கு வாகனத்தை எடுத்துவந்து வேகமாக சோதனையில் ஈடுபட்டிருந்த சின்னாலப்பட்டி போலீசாரின் மீது மோதியுள்ளார். இதில் 3 காவலர்கள் உள்பட, 4 பேரில் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மருது பாண்டிய சுற்றிவளைத்த பொதுமக்கள், அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே காயமடைந்த 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.