தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கலை - இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து, மகிந்திடுவோம். திராவிட மாடல் அரசின் ஆட்சியில் அன்றாடம் நிறைவேறும் சாதனைகளால் ஏழாவது முறையாக திமுகவே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.
‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம் மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம். கட்சியின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.