Skip to main content

சீமானுக்கு நா.த.க. மாநில ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்!

Published on 12/01/2025 | Edited on 12/01/2025
The Seaman has a State coordinator strongly condemned

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8ஆம் தேதி (08.01.2025) கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தந்தை பெரியார் குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து . சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே ஒழியத்,  தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது. ஆரிய வைதிக பிராமண இந்துத்துவாவை, இந்தியை, இந்தியத் தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை. பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம். நமது உயிர் மூச்சான தமிழ் ஈழத்தையும், தமிழை ஆட்சி மொழியாக வழிபாட்டு மொழியாக வழக்காடு மொழியாக, ஏற்றுக் கொள்கிறார்கள்.  இந்துத்துவா வாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா?.

அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்துத்துவாதிகள் எதிர்க்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்! இந்துத்துவாவாதிகள் திணிக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்  திணிக்கிறது. பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள். திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல். பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழையும், தமிழர்களையும் அழித்து வந்தது ஆரியம் தான்.

நாம் தமிழர் கட்சியைத் துவக்கியதும், அன்றைக்கு அரவணைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிஸட்டுகள் தான். திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல. ஆரியம்தான் தமிழனின் முதல் பகை. சீமானின் கருத்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் அமைப்புகளுக்குத் துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ்த் தேசியம் வெல்ல உதவாது.

The Seaman has a State coordinator strongly condemned

தமிழ்த் தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அக முரண்பாடுகளைத் தீர்த்து அதைச் சரியான அரசியல் பாதையில் அணி திரட்டக்கூடிய ஒரு கருத்தியலாக வளர்த்தெடுக்கப்படாமல் அதன் பாட்டிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பாவாதிகளின் நுனி நாவால் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராகவே அது இருக்குமாயின், எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படப்போகும் இன அழிப்புப்போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்று திரட்டுவதற்கு போதாதாகிவிடும். சீமான் திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ்த் தேசியம் வெல்லக் காலத்திற்கு ஏற்றார்போல் வேலைத்திட்டத்தைத் தயார் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்