சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்கிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. அதன்படி முதலாவதாக துபாயில் நடைபெற்று வரும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார். அதற்காக அண்மையில் பயிற்சி எடுத்த போது அவரது கார் விபத்துக்குள்ளனது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து போட்டியின் போது அவர் கொடுத்த பேட்டியில், நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை நடிக்க போவதில்லை என்றும் சினிமாவுக்கு வந்ததால் கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் அண்மையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அஜித்குமார் போட்டியின் போது முழுமையான ஓட்டுநராக செயல்படாமல், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்குமார் கார் ரேஸில் கலந்துகொள்வதை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் நேராக துபாய்க்கே சென்ற உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டியின் போது அஜித்திற்கு வரவேற்பு கொடுத்த வர்ணனையாளர், “அஜித்குமாருக்கு இங்கு கிடைக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த டேடோனா ரேஸிங் சர்க்யூட்டுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் வந்தபோது அவருக்குக் கிடைத்த வரவேற்பைவிட, அஜித்குமாருக்கு இன்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது, அதனால், அவரது இடத்தில் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக அஜித் இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்” என்றார்.