திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் படத்தை கண்டு களித்தனர்.இந்த நிலையில் படத்தின் இடைவேளையின் போது கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேண்டீனில் தின்பண்டங்கள் வாங்கச் சென்றனர். அவர்கள் வாங்கிய சிப்ஸ் தூளாக இருந்ததாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த இளைஞர்கள் சிப்ஸ் தூளாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கேண்டின் ஊழியர்கள் வேறு சிப்ஸை மாற்றித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும் போதையில் இருந்த இளைஞர்கள் கேண்டீன் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திரையரங்க ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போதையில் இருந்த இளைஞர்களை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளனர். இதனால் படம் பார்க்க வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திரையரங்க மேலாளர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்தார். பின்னர் போதையில் இருந்த இளைஞர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள் தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களின் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாளுக்கு நாள் கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர்கள் சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெறுவதால் பொதுமக்களும் அச்சத்தில் வாழ்ந்து வரும் சூழல் நிலவி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்