வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் 50 ரூபாய் உயர்ந்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் மற்றும் கடைகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக ரீதியிலான காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உள்ளூர் சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இதன் விலைகளை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
நடப்பு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை (மானியம் இல்லாதது) 50 ரூபாய் உயர்ந்து, 660 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, சென்னை நிலவரம் ஆகும்.
சேலம் மாவட்டத்தில் இதன் விலை 678 ரூபாயாகவும், டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களிலும் முந்தைய மாதத்தைக் காட்டிலும் 50 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. அதேபோல், வர்த்தக காஸ் சிலிண்டர் விலையும் நாடு முழுவதும் 56.50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 1354 ரூபாய்க்கு விற்பனை ஆகி வந்த வர்த்தக காஸ் சிலிண்டர் நடப்பு மாதத்திற்கு 56.50 ரூபாய் அதிகரித்து, 1410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் இதன் விலை 1315ல் இருந்து 1371.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் என்பதால் காஸ் சிலிண்டர் பயன்பாடு அடுத்து வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதனால் அடுத்தடுத்த மாதங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.