Skip to main content

ஜனவரி 8 பாரத் பந்த்... தொழிற்சங்கள் அறிவிப்பு!!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பில் 2020 ஜனவரி 8 ந் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடக்கவுள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள தொழிற்சங்க அமைப்புகள் மண்டல அளவில் ஆயத்த மாநாடுகளை நடத்தி வருகிறது. 
 

nation wide strike


அதன் வரிசையில் ஈரோட்டிலும் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர்கள் நூறாண்டுகள் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாகச் சுருக்கி தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதைக் கைவிட வேண்டும் எனவும், தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும், தொழிலாளர்களின்குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், நிரந்தரத் தன்மை உள்ள தொழில்களில் காண்ட்ராக்ட்  தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தேசிய நிதியத்தை உருவாக்கி சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களை முடக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வதென புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரியான சம்மேளனங்களின் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்பொது வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றி பெறச்செய்யத் திட்டமிடுவதற்காக சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய நான்கு மையங்களில் அனைத்துச் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள்  பங்கேற்கும் மண்டல  மாநாடுகளை நடத்துவதென அனைத்துச் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்ட  நிர்வாகிகள் பங்கேற்ற அனைத்து சங்க மண்டல ஆயத்த மாநாடு ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எல்.பி.எப். ஈரோடு மாவட்டச் செயலாளர் ஜோ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிற்சங்க ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர், மிகச்சிறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் மறைவுக்கு அஞ்சலியும் திருவள்ளுவரை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசினார். இம்மாநாட்டில் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம், எச்.எம்.எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, எம்.எல்.எப் துணைத் தலைவர் மு.தியாகராஜன், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மத்திய அரசை கண்டித்தும், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 8-1-2020 அன்று நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை கொங்கு மண்டலத்தில் (எட்டு மாவட்டங்களில்) முழு வெற்றி பெறச் செய்வது என்றும், அதற்காக அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வது என்றும் மாநாடு முடிவு செய்தது. பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கு பல்வேறு அமைப்புகளின் ஆதரவைக் கோருவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்