திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை ஜி.குரும்பபட்டியில் வசித்து வரும் முடிதிருத்தும் தொழிலாளியான வெங்கடாச்சலத்தின் மகள் சிறுமி கலைவாணி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் கைதான கிருபானந்தன் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்துப் பாலியல் கொலை செய்யப்பட்ட கலைவாணிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அதன்பின் பத்திரிகையாளரிடம் கரூர் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, “குற்றவாளியை விடுதலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். காவல்துறை, குற்றவாளி இவர்தான் என முடிவு செய்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்களில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும். என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். கலெக்டரும் இது சம்பந்தமாக சீஃப் செக்ரட்டரியிடம் தெரியப்படுத்துகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். பெண்ணாக இருக்கக் கூடிய நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக நின்று உரிய நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவேன். இந்த வழக்கை பொறுத்தவரை காவல்துறையினர் தவறு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு, அரசியல் செய்யக்கூடாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை இதுபோன்ற சம்பவங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை. ஆளும் அ.தி.மு.க அரசு பெண்கள் விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரம் மட்டும் அல்ல பொள்ளாச்சி சம்பவம் உட்பட பல பிரச்சனைகளில் நீதி கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என நம்புகின்றோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் தமிழக அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.” என்று கூறினார்.