விருதுநகரில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தி.மு.க கூட்டணி சிதறு தேங்காய் மாதிரி உடையக்கூடிய நிலையில் இருக்கிறது. அதை தாங்கிப்பிடிக்க இனிமேல் முடியாது. மார்க்சிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணனுடைய பேட்டியைப் பார்த்தாலே தெரியும். ஒரு அவசர நிலைப் பிரகடனம் வந்துவிட்டதைப் போல.. ஆர்ப்பாட்டம் பண்ணவோ, உரிமைக்காகக் குரல் கொடுக்கவோ முடியவில்லை. தவறுகளைத் தட்டிக்கேட்க முடியவில்லை. காவல்துறையின் நடவடிக்கை ஒரு அவசர நிலை நேரத்தில் இருப்பதைப் போல் இருக்கிறதென்று ஆட்சியைக் குறை கூறுவது மட்டுமல்லாமல், நேரடியாகவே அவர் முதலமைச்சரிடத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். ஆகவே, இந்த ஆட்சியை எதிர்ப்பவர்களும் எதிர்க்கிறார்கள், ஆதரிப்பவர்களும் எதிர்க்கிறார்கள், நாட்டு மக்களும் எதிர்க்கிறார்கள். இந்த திமுக ஆட்சி தேவையா?
கடந்த அதிமுக ஆட்சியிலே போராட்டம் நடந்தபோதெல்லாம், எடப்பாடியாரை எதிர்த்துப் போராடியவர்களுக்கெல்லாம் அனுமதி அளித்தோம். அந்தப் பக்குவம் திமுக ஆட்சியாளர்களிடம் இல்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றும். அ.தி.மு.க சொல்லவேண்டியதை தி.மு.க சொல்கிறது. அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதுபோல் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கிழக்கிலோ, மேற்கிலோ, வடக்கிலோ, தெற்கிலோ எந்த திசையிலும் தெரியவில்லை. ஜனவரி 1 பிறந்ததிலிருந்து மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எப்போது தேர்தல் வரும்?
எப்போது இரட்டை இலைக்கு வாக்குகளைச் செலுத்தலாம் என்ற எண்ண ஓட்டத்திலே மக்கள் இருக்கின்ற காரணத்தால், நிச்சயம் அ.தி.மு.க வெல்லும். எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். யாராலும் அதிமுகவுக்கு பாதிப்பு வராது. எம்.ஜி.ஆர். வாக்குகள், ஜெயலலிதா வாக்குகள், எடப்பாடி பழனிசாமி மீதான அபிமானத்தில் விழும் வாக்குகளை எந்தத் தலைவராலும் பிரிக்கமுடியாது. விஜய் இயக்கம் ஆரம்பித்துவிட்டார். அவர் தென்பகுதிக்கு வருவதாகக்கூட செய்தி வந்திருக்கிறது. அவரால் தி.மு.க வாக்குகள்தான் உடையுமே ஒழிய, அ.தி.மு.கவுக்கு சிறிதளவுகூட பாதிப்பு வராது” எனப் பேசினார்.