சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மாணவிகள் பலரும் வந்திருந்த நிலையில் முதல்வர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக அவர்களிடம் இருந்து கருப்பு துப்பட்டாக்கள் வாங்கி வைக்கப்பட்டு பின்னர் மாணவிகள் அனுமதிக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாணவிகளிடம் துப்பட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், கருப்பு நிற துப்பட்டா விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ‘பாதுகாப்பில் இருந்த காவல் ஆளிநர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் சம்பவம் நிகழ்ந்தது. இனி இதுபோன்று நிகழாத வகையில் இருக்க சென்னை காவல் பிரிவுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.