இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் நேசிப்பாயா. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு வர்தன் கலந்து கொண்டு பேசுகையில், "சரத்குமார் சார், அழைத்ததும் வருவதற்கு உடனே ஒத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் சார் இருவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தின் ஜானர் இதற்கு முன்பு நான் முயற்சி செய்யாதது. அதனால், நீங்கள் எப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த பிரிட்டோ சார் மற்றும் சிநேகா பிரிட்டோவுக்கு நன்றி. ஆகாஷ் முதல் நாளிலிருந்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சரத் சார், குஷ்பு மேம், கல்கி, ஸ்ரீகர் சார் என இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அழைப்பை ஏற்று வந்த விஜய் ஆண்டனி சாருக்கும் நன்றி. அதிதியின் நடிப்பு என் இதயத்தை தொட்டுவிட்டது. யுவனின் இசை என் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.
பின்பு யுவன் சங்கர் ராஜா மேடைக்கு வர இருவரிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது விஷ்ணுவர்தனிடம் யுவன் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் ஸ்வாரஸ்யமான பதிலை கொடுத்தார். அவர் கூறியதாவது, “யுவன் பயங்கர டார்ச்சர். உயிர் போகிறளவுக்கு எனக்கு நிலைமை இருக்கும். ஆனால் அவர் கூலாக பதிலளிப்பார். சில நேரம் கண்டுக்கவே மாட்டார். ஆனால் உட்கார்ந்தால் மனுசன் பின்னி பெடலெடுத்து விடுவார். அதே போல யுவனுடைய சிரிப்பு ரொம்ப புடிக்கும். யுவன் மாதிரி யாராலும் பிராங்க் பண்ண முடியாது. நீங்க பார்க்கிற மாதிரி அவர் அமைதியான சாதுவான மனிதர் கிடையாது. ரொம்ப டார்ச்சர் பண்ணுவார்” என ஜாலியாக பதிலளித்தார்.