இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆள்சேர்ப்பு முகாம் தொடர்ந்து நான்காம் நாளாக ஈரோட்டில் நடந்து வருகிறது. நேற்று மூன்றாம் நாளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுமார் நான்காயிரம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்தில்பல்வேறு பணிகளில் பணியாற்ற ஆள்சேர்ப்பு முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்நாள் முகாமில் சேலம், கிருஷ்ணகிரியை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதலாவதாக ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல், புல் அப்ஸ் போன்ற உடல் தகுதி தேர்வுகளும் நடந்தன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ சோதனைகள் நடந்தன. அவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. இரண்டாவது நாளில் நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
மூன்றாவது நாளாக நேற்று நடந்த முகாமில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 4800 மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்கள் இரவே வஉசி மைதானத்தில் வந்து குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு இவர்களுக்கான ஓட்டப் பந்தயம் தொடங்கியது. ராணுவ கர்னல் ரானே என்பவர் முன்னிலையில் ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது வருகிறது. இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். கைகளில் பச்சை குத்தி வந்த ஒரு சில இளைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடந்து வருகிறது. செப்டம்பர் 2 ந் தேதி வரை இந்த முகாம் நடக்கவுள்ளது.