
சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். சுதந்திரதினத்தையொட்டி விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்று அஞ்சலி செலுத்த காத்திருந்த பத்மாவதி என்ற 60 வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தோம்.
அப்போது அவர், கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்ட நாள் முதல் கவலையாகவே இருந்தது. என் மகன் கோவிந்தராஜ், தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான் தஞ்சாவூருக்கு அருகே குலமங்கலத்தில் இருப்பதால் அவ்வப்போது கோவிந்தராஜுடம் கலைஞரின் உடல்நிலைப் பற்றி போனில் பேசுவேன். கடந்த 7ஆம் தேதி எங்களை விட்டு கலைஞர் சென்றார் என்பதை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.
அன்றிலிருந்தே கோவிந்தராஜூக்கு போன் போட்டு, சென்னைக்கு வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்பேன். தினமும் மக்கள் கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு, கூட்டம் கொஞ்சம் குறையட்டும், மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லுவார்.
இன்றைக்கு சுதந்திர தினம், எனக்கும் லீவு கிடைக்கும் அழைத்துப்போவதாக சொன்னவுடன், குலமங்கலத்தில் இருந்து ஒரத்தநாடு வந்து, அங்கிருந்து தஞ்சாவூர் வந்து சென்னைக்கு வந்தேன். எனக்கு 60 வயதாகிறது. பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் கலைஞருக்காக இவ்வளவு தூரம் வந்தேன்.
எங்க குடும்பமே திமுக குடும்பம்தான். எனது மாமா, எனது கணவர் ரெங்கசாமி காலிங்கராயர் ஆகியோர் திமுகவில் இருந்தவர்கள். எனது கணவர் திமுக கிளைச்செயலாளராக இருந்துள்ளார். கலைஞரின் கொள்கைகள், அவரது பேச்சுக்கள் எங்களுக்கு பிடிக்கும். கலைஞர் பங்கேற்கும் கூட்டங்களில் நான் பலமுறை சென்று பார்த்துள்ளேன். தமிழக மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார். இனி இப்படி ஒரு தலைவரை பார்க்க முடியாதுங்க என்றார் கண்கலங்கியபடி...