கரோனா சிறப்பு கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவரை காதல் படாதாபாடு படுத்த, அவரது ஓட்டத்தால் மண்டை காய்ந்து போனார்கள், மதுரை காவல்துறையினர்.
கடந்த 23-ஆம் தேதி, விமானம் மூலம் துபாயிலிருந்து மதுரை வந்தார், சிவகங்கை மாவட்டம் இடையபட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். அவரையும், அதே விமானத்தில் வந்த மேலும் மூவரையும் பரிசோதனை செய்து, மதுரை சின்ன உடைப்பு கரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைத்தனர். அந்த இளைஞருக்கோ, சிவகங்கை மாவட்டத்திலுள்ள காதலியின் நினைப்பு வாட்டி எடுத்தது. காதலியும் காதலனைச் சந்திப்பதற்கு மிக ஆவலாக இருந்தார். கரோனா தொற்று குறித்து உலகமே நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இளைஞருக்கோ, காதலியைச் சந்தித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. கரோனா கண்காணிப்பு முகாமில் தங்கியிருக்கும் காதலனைச் சந்திப்பது ‘ரிஸ்க்’ ஆனது என்பதை காதலி அறியாதவரல்ல.

‘வாழ்வோ, சாவோ, எதுவானாலும் இருவருக்கும் சேர்ந்தே நிகழட்டும்..’ என்று காதலர்கள் இருவரும் ஒரு முடிவெடுத்துவிட, காதல் கிறக்கத்தில் கண்காணிப்பு முகாமில் இருந்து ’எஸ்கேப்’ ஆனார், அந்த இளைஞர். இதுகுறித்து, அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காதலியை, நள்ளிரவில் ஒரு கோவிலில் வைத்து திருமணமே செய்து கொண்டாராம், அந்த இளைஞர். சினிமா காதலை மிஞ்சும் அளவுக்கு இவர்களின் காதல் இருப்பதால், அவசரகதியில் திருமணமும் நடந்துவிட்டதால், மனைவியாகிவிட்ட அந்தக் காதலி, அம்மாவட்ட சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருக்கிறார். தப்பிச் சென்ற இளைஞருக்கு டூ வீலரில் லிப்ட் கொடுத்தவரிலிருந்து, அவர் சந்தித்த அத்தனை பேருமே தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா முகாமில் வைத்திருந்த ஒருவரை இப்படியா தப்பிக்கவிடுவது? உலகமே கொரோனா குறித்த விழிப்புணர்வோடு பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது, கண்காணிப்பு முகாமே குறட்டை விட்டால் எப்படி? காதல் இப்படியா கண்ணை மறைக்கும்? எனக் கேள்விகள் உலுக்குகின்றன.
தப்பும் தவறுமாக அத்தனையும் நடந்துவிட்ட நிலையில், ‘அய்யோ.. அய்யோ.. அந்த இளைஞருக்குக் கரோனா அறிகுறியே இல்லை.’ என்று தற்போது கூறிவருகின்றனர், சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும்.