திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதானம் குறித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குபவர் தமிழக ஆளுநர் ஆர்.என்ரவி. கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு ஆளுநர் மீது அடுக்கி வருகிறது. இதற்காக நீதிமன்றங்களில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநர் உரைக்கும் சட்டப்பேரவைக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை போல் சட்டப்பேரவையில் சர்ச்சை நிகழ்வுகளும் நடந்து பரபரப்பாகி இருந்தது.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலாவாக செல்லும் பொழுதும், கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவிற்கு செல்லும் பொழுதும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமி குறித்து அண்மையில் ஆளுநர் கூறியது கடும் கண்டனத்தை பெற்றுவருகிறது.
ஐயா வைகுண்டசாமியின் 192-வது அவதார தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்பொழுது விழாவில் பேசிய ஆளுநர், 'ஐயா வைகுண்டர் சனாதனத்தை காக்க வந்தவர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் வைகுண்டர் தலைமை பதவி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''புராணங்கள் புகுத்தப்பட்டுள்ளது என வைகுண்டர் சொல்லி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் வரலாறு திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவையெல்லாம் பொய்யானது. எனவே அதனை நம்பி இருக்காதீர்கள். நீங்கள் ஒரு புதிய சகாப்தத்திற்கு வாருங்கள். தெய்வத்தை உங்களுக்குள்ளே பாருங்கள் என கண்ணாடி வழிபாடு கொண்டுவந்தார்.
எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. அவரவர் தாய்மொழியில் அவரவர்கள் வழிபடுங்கள். அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும். வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போல் யாரும் செய்யக்கூடாது. உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் செய்ததை எதிர்த்தவர் வைகுண்டர். மனிதனுக்குள்ளையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர்களுக்கு வேண்டிய சமூக நீதி கேட்டவர் வைகுண்டர். ஆளுநர் அவருடைய பெருமையை பேசி இருக்கலாமே? சனாதனம் என்று சொல்லக்கூடிய ஒரு மதத்திற்காக அந்த மதத்தில் இருக்கக்கூடிய ஜாதி, மனு தர்மம் இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவர். வரலாறு தெரியாதவர்கள் வாய் திறக்கக் கூடாது. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது '' என தெரிவித்துள்ளார்.