பாஜக தமிழ்நாடு மாநில தலைமையகமான கமலாலயத்தில் ‘பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் புதிய இந்தியா 2022’ நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை ஏற்று, அந்தக் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட்டார். இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் கே பாக்யராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ், ராம்குமார் ஆகியோர் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றனர்.
இந்த நிகழ்விற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''என்னுடைய டிவிட்டரில் இன்று காலை பத்தரை மணிக்கு ஒரு வீடியோ போட்டிருக்கிறேன். அந்த வீடியோவை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் ஆளுநர் மீது எந்தவிதமான தாக்குதலும் நடக்கவில்லை என்று சொல்லட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த வீடியோவை யார் பார்த்தாலும் தெரிந்து கொள்ளலாம். அது ஒரு அன் எடிட்டட் ஃபுட்டேஜ். ஆளுநரின் கான்வாய் கொஞ்சம் விட்டால் டிச்சுக்கு உள்ளே போயிருக்கும். அந்த அளவுக்கு பதற்றம் இருந்தது அந்த இடத்தில். சாலையின் அருகிலேயே போராடுவதற்கு இடம் கொடுத்த முதல் தமிழக போலீசை இன்றைக்கு தான் பார்க்கிறேன். குறிப்பாக அங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்... எப்படி இப்படிப்பட்ட வார்த்தைகள்... கொலைகாரர்... தமிழக ஆளுநர் கொலைகாரர் என்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள். கைது செய்து சிறையில் அடைத்தீர்களா'' என்று கேள்வி எழுப்பினார்.