குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு இடங்களிலும் நடைபெறும் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இந்த விண்ணப்பப் படிவம் மற்றும் டோக்கன்களை வழங்க உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 1207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரை விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. இரண்டாவது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. இந்தப் பணியில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் 2183 பேர், முகாம் பொறுப்பு அலுவலர்கள் 1130 பேர், மண்டல அலுவலர்கள் 341 பேர், மேற்பார்வை அலுவலர்கள் 113 பேர், மாவட்ட அளவிலான மேற்பார்வை அலுவலர்கள் 10 பேர் என மொத்தம் 3,777 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
இது தொடர்பாகத் தகவல் மற்றும் சந்தேகம் தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு தொலைப்பேசி எண் 0424 - 2252052, வாட்ஸ்அப் எண் 94894 59672 மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலக தொலைப்பேசி எண்கள் ஈரோடு-0424 2254224, பெருந்துறை - 04294- 220577, நம்பியூர் 04285- 267043, மொடக்குறிச்சி 0424 - 2500123, கொடுமுடி 04204- 222799, கோபிசெட்டிபாளையம்-04285- 222043, பவானி -04256 - 230334, அந்தியூர் 04256 - 260100, சத்தியமங்கலம்-04295- 220383, தாளவாடி - 04295-245388 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.