இன்று மதியம் 3-30 மணி. திண்டிவனத்திலுள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள அறை ஒன்றின் கதவு பலமாகத் தட்டப்பட்டது. திறக்காத நிலையில் அங்கிருந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தூக்குப் போட்டு பிணமாகத் தொங்கினார் 26 வயதே ஆன லோகேஷ்.
யார் இந்த லோகேஷ்?
சி.வி.சண்முகத்தின் தங்கை வள்ளியின் மகன்தான் லோகேஷ். சிறு வயதிலேயே தன் தாயை இழந்த லோகேஷை சி.வி.சண்முகம் அரவணைத்து வந்திருக்கிறார். சி.வி.சண்முகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு 22 ஆண்டுகளுக்கு முன் இறந்த தங்கை வள்ளியும் ஒரு காரணமாக இருந்தார். அதனால், லோகேஷ் மீது பாசத்தைப் பொழிந்து வந்தார் சி.வி.சண்முகம். பொறியியல் பட்டதாரியான லோகேஷ் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கு படிப்பை முடிக்காமலேயே ஆறு மாதங்களுக்கு முன் திரும்பினார். அமைச்சர் சி.வி.சண்முகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றுவிட, ஏதோ விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டார் லோகேஷ்.
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு லோகேஷுக்கு அப்படியென்ன பிரச்சனை?
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், உறுதி செய்யப்படாத சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. ‘நியூஸ் ஜெ சேனலில் லோகேஷும் ஒரு டம்மி பொறுப்பில் இருந்திருக்கிறார். உயிரையே விட்டிருக்கிறார் என்றால் காதல் விவகாரமாகவும் இருக்கலாம். அல்லது, லோகேஷ் மனம் நோகும்படி யாராவது பேசியிருக்கலாம். தனக்கு விருப்பமில்லாத உறவுமுறைப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவும் செய்திருக்கலாம்.’ என்கிற ரீதியில் பலவாறாகவும் சந்தேகங்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.