உலக மகளிர் தினத்தையொட்டி டெல்லி இந்தியா கேட் முதல் கன்னியாகுமரி வரை எல்லை பாதுகாப்பு துணை ராணுவப் படை மற்றும் சாகச வீராங்கனைகள் 38 பேர் உள்ளிட்ட 50 பேர் இருசக்கர வாகன பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.
மார்ச் 8ஆம் தேதி டெல்லி இந்தியா கேட்டில் தொடங்கிய சாகச வீராங்கனைகளின் பயணம், ஒவ்வொரு மாநிலங்கள் வழியாக கடந்து, தற்போது தமிழ்நாட்டில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று கரூர் வருகை தந்த ராணுவ வீரர்கள் மற்றும் சாகச வீராங்கனைகள் திருக்காம்புலியூர் ரவுண்டானா, பேருந்து நிலையம் ரவுண்டானா, திண்ணனார் ஜவகர் பஜார் வழியாக திருவள்ளூர் விளையாட்டு மைதானத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களுக்கு வழி நெடுகிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த துணை இராணுவ வீராங்கனைகளுக்கு ரோஜா மலர்கள் கொடுத்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஏ.டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் முப்படை வீரர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.