திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்28 வயதான பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பிரியாவிற்கு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தொடர இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க, இது காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிச் சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் எங்குத் தேடியும் கிடைக்காததால், சிறுவன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளிச் சிறுவன் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், பள்ளிச் சிறுவனுக்கும், பிரியாவிற்கு இருந்த காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார் பிரியாவும், சிறுவனும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறிய கல்பட்டு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து பிரியாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன் சிறுவனை அரசின் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுக்கு தாயான பெண் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவருடன் காதல் வயப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.