Skip to main content

“ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது” - கனிமொழி

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
Kanimozhi said This moment that makes every Tamilian proud

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே சொல்கிறேன் தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்த மாபெரும் மானுட புவியியல் பிரகடனத்தை இங்கு அறிவிக்கிறேன். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பட்ட கால கணக்கீடுகளிலிருந்து இரும்பு அறிமுகமான கி.மு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றுள்ளது.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகமாகி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூனே நகரில் உள்ள அகழ்வாய்வு நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனம் அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி பல ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட முடிவுகள் கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது. இப்போது கிடைத்துள்ள கதிரியக்க கால கணக்கீடுகள் மூலம் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என தெரிய வருகிறது” என்றார். 

முதல்வரின் அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும் வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்பொன்னின் அன்ன நறுந்தாது உதிர.(நற்றினை 249: 1-4)

‘இரும்பின் வலிமையை ஒத்தது புன்னைமரம்’ என்கிறது எட்டுத்தொகையில் முதல்நூலான நற்றிணை. உலக வரலாற்றிலும், நாகரிகங்களின் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது இரும்பின் பயன்பாடு. நமது இலக்கியங்கள் எடுத்தியம்புவது போல், தமிழ் நிலத்திலிருந்தே இரும்பின் காலம் தொடங்கியதாக நிறுவும் புதிய ஆதாரங்களை அறிவியல்பூர்வமாக உலகிற்கு வழங்கியுள்ள மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்