சொத்துவரி விவகாரத்தில் ரஜினி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கை தள்ளுபடி செய்ததுள்ளது உயர்நீதிமன்றம்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடைசியாக கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருகிறோம். கரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை. மார்ச் 24-ம் தேதிக்கு பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கிவிட்டோம்.
மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரியைச் செலுத்தாவிட்டால், 2 சதவீத அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர். மண்டபம் காலியாக இருந்தால், மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதுதொடர்பாக என் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று ரஜினி கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென ரஜினி தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23 -ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா?
மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும்? நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? நடிவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? எனக் கேள்விகள் எழுப்பியதோடு, இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தார்.
அதன்பின்னர், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்திருந்தார். தற்பொழுது சொத்துவரி விவகாரத்தில் ரஜினி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கை தற்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.