![Will the campaign go to all parties? Mother missing incident due to son rebuked!](http://image.nakkheeran.in/cdn/farfuture/fm6mYyF83beRCHMNc0dOUFLXVjDZ-Uh8ikF0nVY-SQk/1618538103/sites/default/files/inline-images/0000_6.jpg)
சேலம் சின்னபுதூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (46). இவருடைய மனைவி சாந்தி (41). கடந்த 8ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். சட்டமன்றத் தேர்தலின்போது, அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் சாந்தி ஈடுபட்டு வந்துள்ளார்.
கட்சியினர் கொடுக்கும் உணவு, பணத்துக்காக அவர் கூலி வேலைக்குச் செல்வது போல, எந்தக் கட்சியினர் அழைத்தாலும் பரப்புரை, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன் தேர்தல் பரப்புரைக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிய சாந்தியை, அவருடைய மகன் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சாந்தி, திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாந்தியின் உறவினர்கள், தோழிகள் வீடுகளிலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கடைசியாக அவர் எந்தெந்த கட்சி சார்பில் பரப்புரைக்குச் சென்றாரோ அக்கட்சியினரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.