Skip to main content

’’ அடுத்தவேளை சோற்றுக்கு என்ன வழி ? ’’ - கரோனா அச்சத்தைத் தாண்டி அச்சுறுத்தும் கேள்வி !

Published on 04/04/2020 | Edited on 04/04/2020


முறையான திட்டமிடல் ஏதுமின்றி மேற்கத்திய நாடுகளில் உள்ள நிலைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்திய நிலைமையைக் கணக்கில் கொள்ளாமல், கண்மூடித்தனமாக மோடி அறிவித்த ஊரடங்கு அறிவிப்பால் நாடே நிலைகுலைந்துதான் போயிருக்கிறது.

 

பங்களாவில் வசிப்பவன் தொடங்கி பிளாட்பாரத்தில் படுத்துறங்குபவன் வரையில் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதென்பதை மறுக்க முடியாததுதான்.வீட்டில் அவர்களையெல்லாம் முடக்கிவைப்பதற்கு முன்னர், அவர்களின் வாழ்நிலையைப்பற்றி பொருளாதார நிலையைப் பற்றி மோடி அரசு கொஞ்சமாகவாவது யோசித்ததைப்போல தெரியவில்லை என்பதைத்தான் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். 

 

ப்

 

குறிப்பாக, குறுக்கும் நெடுக்குமாய் நாலாபுறமும் விரவிக்கிடக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய கடுகளவும் அக்கறையின்றி மேற்கொள்ளப்பட்ட முட்டாள்தனமான நடவடிக்கை இதுவென்பதை, டெல்லியில் பேருந்துக்காக இலட்சக்கணக்கில் குவிந்த  இருநூறு கிலோமீட்டர் தூரத்தை மூட்டை முடிச்சுகளோடும் குழந்தை குட்டிகளோடும் நடந்தே கடந்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக்காட்சிகளே சாட்சிகளாய் கண்முன் நிற்கின்றன.


இரண்டு நாட்களாக உணவின்றி தவித்த தொழிலாளி  வெறும் பிஸ்கட்டும் தண்ணீரும் குடித்து உயிர்வாழ நேரிட்ட துயரம்.  பட்டினியால் பதினோறுவயது சிறுவன் பலியான சம்பவம்  எனக் கொரோனா பலியைக் காட்டிலும் பட்டினியால் பலர் உயிரிழக்க நேரிடும் என்ற செய்திகளும் நம்மை அச்சுறுத்துகின்றன.பற்றி எறியும் பிரச்சினையாக உருமாறியிருக்கிறது. 

 

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினையோடு ஒப்பிட முடியாதெனினும், விளிம்புநிலையில் வாழும் ஆதரவற்றோர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானதாக இருக்கிறது.தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாய் ஜனத்திரள் கடந்துபோன நாட்களில்கூட சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்; இன்றும் ஆளரவமற்ற சாலைகளில் நிராதரவாய் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில், கொரோனா குறித்த அச்சத்தைத் தாண்டி, இவர்களையும் அச்சுறுத்தும் கேள்வி ஒன்றுதான் ''அடுத்தவேளை சோற்றுக்கு என்ன வழி?''

 

சென்னை அசோக்பில்லர் மெட்ரோ ரெயில் நுழைவாயிலின் அருகே தன்னந்தனியே அமர்ந்திருந்த அந்த மூதாட்டிக்கு வயது எழுபதைத் தாண்டியிருக்கும் விபத்தொன்றில் கால் முறிந்த இவரால் பிட்டத்தைத் தேய்த்தபடி நகர மட்டும்தான் முடியும்.

 

''ஒன்னுக்கு ரெண்டுக்கு எதுக்குமே இதால நகர முடியாது.எல்லாமே இருந்த இடத்துலேயேதான்.குளிச்சே பல மாசம் ஆகுது.நாங்கதான் அப்பப்ப தண்ணிய ஊத்திவிடுவோம்.இதுக்கு முன்ன மெட்ரோ ரெயில் வாசலாண்டதான் இருந்துச்சி. நாத்தம் தாங்கலைன்னு போலீசுகாரங்கதான் இங்க இட்டாந்து போட்டாங்க. அன்னிலேர்ந்து இங்கேதான் இருக்கு.'' என்றார், அவருடனே வசித்துவரும் அஞ்சலை.

செல்வி
 

ச்



திருச்சியைச் சேர்ந்த அஞ்சலையும் செல்வியும் அருகருகே இதே பிளாட்பாரத்தில்தான் வசித்து வருகிறார்கள்.''சாப்பாடு யாராவது வந்து கொடுக்கிறாங்க.மூனு வேளையும் கிடைக்கிறதில்ல.கிடைக்கறப்போ சாப்பிட்டிக்கிறோம்.இல்லாதப்ப, கைல இருக்கிறத வச்சி அம்மா உணவகத்தில வாங்கிச் சாப்பிடுறோம்.'' என்றனர் அஞ்சலையும் செல்வியும். ''என் ஒடம்பு நல்லா இருந்தப்ப கொத்து வேலைக்குத்தான் போயிட்டுருந்தேன்.தி.நகர் சரவணா ஸ்டோர் கட்றப்போ முழுசா அங்கேயே இருந்துதான் வேலை செஞ்சேன். இப்போ முடியல. இங்கே கிடக்கிறேன்...'' பெருமூச்செடுத்து சொல்லி முடித்தார் அஞ்சலை.

 

சென்னை, நந்தனம் சி.ஐ.டி.நகர் சாலையோரம்,பாலிதீன் பையில் இருந்ததைச் சாப்பிட்டிக் கொண்டிருந்தார் பெருமாள். ''டெய்லிலாம் சாப்பாடு கிடைக்கிறதில்லை. முன்னயாவது, கடை இருந்திச்சு. போறவங்க வர்றவங்க கிட்ட பிச்சை எடுத்து சாப்பிட்டுகிட்டிருந்தேன்.இதோ, நேத்து கொடுத்துட்டு போனாங்க. அதுல கொஞ்சம் மிச்சம் வச்சி இப்போ சாப்பிட்டுகிட்டிருக்கேன்...''... கசிந்த கண்ணீர்த் துளிகள்தான் அவருடனான உரையாடலை இடைமறித்தது.

 

ப்

 

தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரே சந்தித்த ஸ்ரீராம் ''மூனு வேளைக்கும் யாராவது வந்து கொடுத்திடுறாங்க.சாப்பாட்டுக்கு ஒன்னும் குறையில்லை'' என்றார்.இளைஞர்கள் சிலர் தன்னார்வத்தோடு வழங்கிய குளிர்பானத்தப் பருகியபடியே, ''எதனால எல்லாம் ஸ்டிரைக் பன்றாங்க?எப்போ ஸ்டிரைக் முடியும்? அதுவரைக்கும் பஸ் எல்லாம் போகாதா?நான் புரசைவாக்கத்துக்கு போகனுமே?'' அடுத்தடுத்து கேள்வியெழுப்பிய சிறீராமுக்குச் சொல்ல  நம்மிடம் பதிலில்லை. 

 

பரபரப்புக்குப் பெயர்போன தி.நகர் ரங்கநாதன் தெருவையடுத்த உஸ்மான் ரோட்டின் கடையொன்றின் முன்பாக அமர்ந்திருந்த ஆரியமாலா,சாலையோர காய் வியாபாரி. ''சொந்த ஊரு திண்டிவணம். சின்ன புள்ளையிலே வந்துட்டேன். கிடைச்சாத்தான் சோறு.'' கேட்ட ஆறு கேள்விக்கு கிடைத்த மூன்று பதில்கள் இவை.''சாப்பாடு யாரும் வந்து கொடுக்கலைன்னா என்ன பன்னுவீங்க?'' என்ற இறுதி கேள்விக்கு வெறித்த பார்வைதான் பதிலாய் கிடைத்தது. 

 

தீயில் கருகி சிதைந்த தேகத்தோடு கோயில் வாசலில் அமர்ந்திருந்த விமலா, ''நான் இங்கேயேதான் இருப்பேன்.கோயிலுக்கு வர்றவங்ககிட்ட காசு வாங்குவேன். கோயில் ஆளுங்க அவங்க வீட்ல இருந்து மூனுவேளையும் கொடுத்திடுவாங்க. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை.'' என்றார். 


தி.நகர் போத்தீஸ் பாலத்துக்கு கீழே கடையொன்றின் வாசலில் ஆளுக்கொரு திசையில் கிடந்த பாபு,மோகன்,சீனு மூவருமே குப்பைகளிலும் சாலையோரமும் வீசப்படும் பழைய பொருட்களைச் சேகரிப்பவர்கள்.''இப்போ எங்களுக்கு வேலையில்லை. யாராவது கொடுக்கிறத வாங்கிப்போம். இல்லைன்னா, காலைல அஞ்சு ரூபா, மதியம் அஞ்சு ரூபா நைட்டுக்கு ஆறு ரூபா இருந்தா போதும். அம்மா உணவகத்தில சாப்பிட்டுக்குவோம்.இப்படித்தான் போகுது...'' என்றார்கள். 

 

அவர்களுக்கு அருகே மேம்பாலத் தூண்களுக்கிடையே அழுக்குத்துணி மூட்டைகளைத் தலையில் வைத்து இருவர் கண்ணயர்ந்துக் கிடந்தார்கள். 

 

தி.நகர் நடேசன் பூங்கா அருகில் சந்தித்த கண்ணன், உச்சி வெய்யிலில் பொடிநடையாய் மயிலாப்பூரை நோக்கி செல்வதாய் சொன்னார். ''ரெண்டு நாள் அங்க இங்க இருந்து பாத்துட்டேன்.காசும் கிடைக்கல.சோறும் கிடைக்கல. இருக்கிற காச வச்சி அம்மா உணவகத்துலதான் சாப்பிட்டேன்.மயிலாப்பூர் பக்கத்துல சோறு கிடைக்கிதுனு சொன்னாங்க.அதான் கிளம்பிட்டேன்.இன்னிக்கே போயிட முடியாது. நடுவுல எங்கயாவது தங்கிட்டுதான் போகனும்'' என்றார். 

 

சேமியர்ஸ் ரோடு மூப்பனார் பாலத்தின் கீழ் படுத்துக்கிடந்த சிறீதர் இதற்கு முன்னர் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்து வந்தவர்.வேலை செய்த இடத்தில் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டு;அடுத்த வேலை தேடி அலைந்த தருணத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இவருடன் படுத்திருந்த மற்ற இருவர்கள் சாலையோரம் சிதறிக்கிடக்கும் பழைய காகிதங்களைச் சேகரிப்பவர்கள்.இவர்கள் மூவருமே மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த தற்காலிக முகாமிலிருந்து தப்பி வந்தவர்கள். 

 

''சமுதாய நலக்கூடத்துல எங்கள மாதிரி இருக்கிற ஆளுங்கள எல்லாம் சேர்த்து தங்க வச்சிருக்காங்க.எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இடிச்சிகிட்டு நெரிசல்ல தங்குற மாதிரி இருக்கு.இடைவெளிவுட்டு பழகணும்னு சொல்றாங்க.அங்க அதுக்கு வாய்ப்பே இல்லை.ஒரே நாத்தமா இருக்கு.புதுசா தொத்துவியாதி வந்துர போவுதுனுதான் இங்க வந்துட்டோம்.அங்க குளிக்க ரெண்டுக்கு போகக்கூட வசதியில்ல.குழாயில பென்சில்மாதிரி தண்ணி ஒழுகுது.உள்ள போயி உக்காந்தவுடனே கதவ தட்டுறானுங்க.அந்தக் கூட்டத்தில இருக்க முடியாது.'' என்கின்றனர். 

 

''இயற்கையான காத்துல ... இப்படி இடைவெளி விட்டு இங்கேயே இருந்துட்டு போறோம்.டெய்லி 15 ரூபா இருந்தா போதும்அம்மா உணவகம் மட்டும் இல்லைன்னா, இந்நேரம் பத்து பதினைஞ்சி பேர் செத்திருப்பாங்க'' என்றார், அதில் ஒருவர்.

 

''பேப்பர் பொறுக்கி காசு வரலன்னாலும், ஏதோ உங்கள மாதிரி வந்துட்டு போறவங்ககிட்ட காசு வாங்கிச் சாப்பிட்டிட்டு இருந்தோம்.இப்ப அதுக்கும் வழியில்லாம, மிச்ச நாளை எப்படி ஓட்டப்போறோமோ தெரியல'' எனச் சோகமாய் சொல்லிமுடித்தார் மற்றொருவர்.

 

u

 

புகைப்படம் தவிர்த்த சீனிவாசன் கையில் இரண்டு பன் பாக்கெட்டுகளோடு, சைதாப்பேட்டை சின்னமலையையடுத்து கவர்னர் மாளிகைக்கு எதிர் சாலையில் அமர்ந்திருந்தார்.''கிடைக்கிறது,கிடைக்கும்'' என மேலே கையைக் காட்டி வழியனுப்பிவைத்தார். 

 

வேளச்சேரி - செக்போஸ்ட் வனச்சரக அலுவலக வளாகத்தையொட்டிய சாலையோரமாய் சுள்ளென்று எரிக்கும் உச்சிவெயிலிலும் பரிதாபமாய் படுத்துக்கிடந்தார், சந்திரன். வாக்கியங்களை நாம்தான் கோர்த்துக்கொள்ளவேண்டும், வெறும் வார்த்தைகளாய் பேசினார். 

 

வார்த்தையாய்க்கூட பேச முடியாத முதியவர் ஒருவர் தில்லை கங்கா நகரிலிருந்து நங்கநல்லூருக்கு ‘நகர்ந்து’கொண்டிருந்தார். இரண்டு நாளில் இரண்டு வேளை சாப்பிட்டதாகச் சொன்னார். 

 

ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் படுத்திருந்த ஒருவரை எழுப்பி, உணவு பொட்டலத்தை நீட்டினர், அப்பகுதியைச் சேர்ந்த கலாம் உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர். சாப்பிட்டுவிட்டதாகவும் வேண்டாமென்று மறுத்துவிட்டு அயர்ந்தார் அந்த முதியவர். 

 

p

 

பட் ரோட்டில் சந்தித்த பஞ்சாட்சரம், ''ஒடம்பு நல்லா இருந்தா மூட்ட தூக்க, வண்டி இழுக்க போவேன். இல்லைண்ணா இப்படி ஒக்காந்திடுவேன். ஏதோ கிடைக்கிது. இப்ப நிலைமையில என் ஒடம்பும் பலமில்லை. தினம் ரெண்டு வேளை கிடைக்குது. பாக்கலாம் எப்படின்னு...'' மூச்சோடு சேர்த்து தன் பேச்சையும் இழுத்தவாறே புன்னகைத்தார். 

 

மெப்ஸ், தாம்பரம் பேருந்து நிலையங்கள் ஆதரவற்றோர்களின் அறிவிக்கப்படாத தற்காலிக முகாம்களாக மாறியிருக்கிறது. இவ்விரு இடங்களிலும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். 


சந்தித்தவர்களில் பெரும்பாலோனோர், ஏதோ ஒரு வகையில் தம் குடும்பத்தினரால் சொந்த உறவுகளால் கைவிடப்பட்டவர்கள்; புறக்கணிக்கப்பட்டவர்கள். அதனால்தான் என்னவோ, இவர்கள் எவருமே, ''தம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை;தமக்கு யாரும் உணவளிக்கவில்லை'' என்று சொல்லி புலம்பவில்லை.தகவலாய் சொல்லி கடந்து போனார்கள். 

 

இவர்களது ஒரே நம்பிக்கை ''அம்மா உணவகம்''. சமூகத்தில் வாழும் ஏழைகளுக்கு ரேஷனில் போடும் புழுத்த அரிசியும்;நூறுநாள் வேலைத்திட்டமும் எவ்வாறு உயிர்பிச்சையாக அளிக்கப்படுகிறதோ,அவ்வாறு சமூகத்திற்கு வெளியே வாழும் இவர்களுக்கு அரசு போட்டிருக்கும் உயிர்பிச்சை அம்மா உணவகம்.

 

முகம் தெரியாத மனிதாபிமானிகள் சிலர் தன்னார்வத்தோடு வழங்கும் சோற்றுப் பொட்டலங்கள்தான் இவர்களுக்கு வெளியிலிருந்து கிடைக்கும் ஒரே ஆதரவு. 


தொத்துநோய் என்பதைத்தாண்டி, கொரோனா என்ற வார்த்தைக்கூட இவர்களுள் பலருக்கு அந்நியமானவையாகத்தான் இருக்கிறது. உயிர்வாழ்வதற்காகக் கூட இவர்கள் போராடத் தயாரில்லை. வாழ்க்கையில் ஏற்கெனவே தோற்றுப்போனவர்கள் என்பதால் என்னவோ,''நடப்பது நடக்கட்டும்'' என்று நடைப்பிணங்களாய் விரவிக்கிடக்கிறார்கள்.

 

செய்தி, படங்கள் : இளங்கதிர்
 

சார்ந்த செய்திகள்