
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இங்கு சாம்ராஜ் நகர், தாளவாடி, ஆசனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் ஏராளமான மினி ஆட்டோக்களில் தினமும் ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
நேற்று இரவு தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று, அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
அப்போது சாலையின் ஓரமாக யானையைத் தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுநர் வாகனத்தை இயக்கிய போது, காட்டு யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது. பின்பு உருளைக்கிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து மீண்டும் சீரானது.