
கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தமிழகம் முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு நாளை (16.01.2021) வழங்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்துள்ளது சுகாதாரத்துறை.
வேலூர் மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளன. இதில் வேலூர் மண்டலத்துக்கு 42,100 யூனிட் மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனைப் பாதுகாப்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரப்படுத்திவைத்துள்ளனர்.
இதில் வேலூர் மாவட்டத்திற்கு 18,600, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 4700, இராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 4400, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 14,400 யூனிட்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இதனை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வாங்கி, பகுதி வாரியாக பிரித்து அனுப்பியுள்ளனர்.
இதனை நாளை அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களில் தொடங்கி வைக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகேயுள்ள எஸ்.வி நகரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையிலும் அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தொடங்கிவைக்கவுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களிலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 இடங்கள், வேலூர் மாவட்டத்தில் 10 இடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் துவங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.