குமரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் பெண் குழந்தைகளை சூடு வைத்து சித்திரவதைபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்யூா் அருகே ஆலங்கோட்டில் சி.எஸ்.ஐக்கு சொந்தமான மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. காப்பகத்தோடு அந்த குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த காப்பகமும் பள்ளிக்கூடமும் அரசு நிதி உதவியில் இயங்கி வருகிறது. இங்கு மூலை முடக்கு வாதம், மனவளா்ச்சி குறைபாடு, ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள் என மூன்று வகையான குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளை ஊழியர்கள் தீயால் சூடு வைத்து கொடுமை படுத்துவதாகவும் பல குழந்தைகளை காணவில்லை என்று மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரி குமுதா நேற்று இரவு 7மணிக்கு இரணியல் போலீசாருடன் சென்று அந்த காப்பகத்தை சோதனை செய்தார்.
அப்போது காப்பகத்தில் ஓரு அறையில் நெல்லையை சோ்ந்த 17 மற்றும் 6 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உடல் முமுவதும் தீ வைத்து சூடுவைக்கப்பட்டு காயங்களுடன் துடி துடித்து அழுது கொண்டிருந்தனர். உடனே அந்த இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
மேலும் 6 குழந்தைகளுக்கு உடலில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட தீயால் சூடு வைத்த வடுக்கல் (காயங்கள்) காணப்பட்டன. இதையெல்லாம் செய்தது யார் என்று கேட்டதற்கு காப்பக சமையலர் சரோஜா மற்றும் வார்டன் ஜெயப்ரியாவை அந்த குழந்தைகள் சுட்டி காட்டினார்கள்.
மேலும் காப்பகத்தில் 26 பிள்ளைகள் இருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடபட்டிருந்தது. ஆனால் 12 குழந்தைகள் தான் காப்பகத்தில் இருந்தனர். இதுபற்றி அதிகாரி குமுதா கேட்ட போது வார்டனும் சமையலரும் முன்னுக்கு பின்னான பதிலை சொன்னதால் அவா்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அந்த குழந்தைகளின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டு அவா்களை பராமரிப்பதற்கு தகுதியான ஊழியா்கள் அந்த காப்பகத்தில் இல்லையென்றும் மேலும் அந்த குழந்தைகளுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டினார்கள்.