
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பாமகவின் மகளிர் அணி சார்பில் சௌமியா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. இதனிடையே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது குறித்து பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு சென்னை நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 'பாமக போராட்டத்தை அனுமதிக்க உத்தரவிட முடியாது' என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், 'அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்?' எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? வெறும் விளம்பரத்திற்காக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். சமூகத்தில் ஆண் பெண் என பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.