
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வரும் பிப்.17 தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு நடிகை சென்றுவிட்டார். இந்நிலையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376 ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு வரும் பிப்.17 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.