திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் பகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் இருந்து செல்லும் எம்பிக்கள் மக்களுக்கு கொண்டு வரவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 60 சதவீத திட்டப் பணிகள் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் கமிஷனாகவே சென்று விடுகிறது. 40 சதவீத பணிகள் மட்டுமே மக்களுக்கு திட்டங்களாக சென்றடைகிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வாக்கு கேட்பார்கள்? இந்தியா பொருளாதாரத்தில் உலக நாடுகளில் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ரஷ்யா ராணுவத்திலும், அணுமின் நிலையத்திலும் முன்னோடியாக திகழ்ந்தாலும், சாலைகள் மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பில் ரஷ்யாவை காட்டிலும் இந்தியா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது'' என்றார்.