
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி தராமல், சந்தையை மூன்றாவது நபர்களுக்கு குத்தகைக்கு விடுவது ஏன் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சேலம் அம்மாப்பேட்டையில் இயங்கிவரும் வ.உ.சி.மலர் தினசரி அங்காடியில் உள்ள பெரிய கடைகளுக்கு 20 ரூபாய் மற்றும் சிறிய கடைகளுக்கு 15 ரூபாய் வீதம், தினசரி வாடகையாக சேலம் மாநகராட்சி நிர்ணயித்தது. அதேபோல தலைச் சுமை ஒன்றிற்கு தலா 10 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
அந்தக் கட்டணத்தை வசூலிக்க சூரமங்கலம் முருகன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்ணயித்ததை விட அதிகமாக, 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்ற முருகன், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் கூறி, பிரபாகரன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கவும், மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்கவும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, ‘மாநகராட்சி மலர் சந்தையில் கட்டணம் வசூலிப்பதை தனியாருக்கு டெண்டர் விட்டது ஏன்? சந்தைகளை மாநகராட்சியே ஏன் நடத்தக் கூடாது? விவசாயிகளுக்காக மானியங்களையும், பல்வேறு நலத் திட்டங்களையும் அரசு அமல்படுத்துகிறது. விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்குத் தேவையான வாய்ப்பை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திக் கொடுக்காமல், ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகைக்கு விடுவதால், விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்’ என வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக, வழக்கறிஞர் என்.சுரேஷ் என்பவரை நியமித்த நீதிபதி, வழக்கு குறித்து ஜனவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சேலம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)