கடந்த 2 மாதத்தில் மூன்று முறைக்கு மேல் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்வராயன் மலை மற்றும் துறையூர் அருகே உள்ள பச்சைமலை ஆகிய பகுதிகளிலிருந்து உருவாகி ஓடி வருகிறது வெள்ளாறு. இதில் கல்லாறு, ஸ்வேதா நதி, சின்னாறு, ஆனைவாரி ஓடை ஆகிய சிற்றாறுகளும், ஓடைகளும் இணைந்து சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை கடந்து சென்று கடலில் கலக்கிறது.
இந்த வெள்ளாற்றில் கடந்த 2 மாதத்திற்குள் மூன்றுமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர கிராமங்களான ஆவினன்குடி, நெய்வாசல், சன்னாசி நல்லூர், சௌந்தர சோழபுரம், சம்பேரி, கூடலூர், இடையம், குடிக்காடு, இறையூர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
மேற்படி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி கடக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளாற்றில் போதிய மழையின்றி தண்ணீர் வராமல் வறண்டு கிடந்தது. இந்த ஆண்டு மூன்று முறைக்கு மேல் கடந்த 2 மாதமாக வெள்ளாற்றில் தண்ணீர் ஓடி வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கரையோர கிராம மக்களுக்கு வறட்சிக் காலங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. ஆழ்குழாய் போர்வெல் மூலம் விவசாயத்திற்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். மூன்று முறைக்கு மேல் வெள்ளம் வந்ததைக் கண்டு பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.