
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் சிறுமிகள் மற்றும் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாக புகார் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை இதுவரை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது.
சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தார். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இல்லாமல் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனம் குறித்து வரும் ஜூன் 20ஆம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டார்.