Skip to main content

“இளைய தலைமுறையை காக்க மதுவிலக்கு மட்டும் தான்  தீர்வு” - அன்புமணி

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

Prohibition is only solution to protect younger generation says Anbumani

தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில்  5 மடங்கு அதிகரிப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி  போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெற்று வருவோரின் எண்ணிக்கை 2023-24ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட  5 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கின்றன.  தமிழகத்தில் மதுவால் ஏற்பட்டுள்ள தீமைகளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இந்த புள்ளிவிவரங்கள்  அதிர்ச்சியளிக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை  35 ஆகும். அவற்றில் 2022-23ஆம் ஆண்டில் 3,668 பேர் மருத்துவம் பெற்று வந்தனர். 2023-24ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,938 ஆக உயர்ந்து விட்டதாக மத்திய அரசின் சமூகநீதித்துறை வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட போதை மறுவாழ்வு மையங்களில் மருத்துவம் பெறுவோரின்  எண்ணிக்கை மட்டும் தான். அரசின் அங்கீகாரம் பெறாமல்  நூற்றுக்கணக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  அவற்றில்  லட்சக்கணக்கான குடிநோயர்கள் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் கடந்த 2002-03ஆம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு மது குடிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையான 18 வயது நிறைவடைந்தவர்களின் அளவு 46.50% ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கக் கூடும். தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக மது விற்பனையாகி வருகிறது . அதிகாரப்பூர்வமற்ற வகையில் சந்துக்கடைகள் உள்ளிட்ட வழிகளில் அதே அளவு மது விற்பனையாகி வருகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையான குடி நோயர்களின் எண்ணிக்கை கணக்கில் காட்டப்படுவதை விட நூறு மடங்குக்கும் கூடுதலாக இருக்கும்.

மது, கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் போதை நோயர்களை உருவாக்குவது மட்டுமின்றி,  குற்றங்கள் பெருகுவதற்கும் காரணமாக உள்ளன. போதைப் பழக்கத்தால் நாம் நமது எதிர்காலத் தூண்களான இளைஞர் சமுதாயத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இதைத் தடுப்பதற்கானத் தீர்வு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களில் நடமாட்டத்தை ஒழிப்பதும் தான். தமிழக அரசு இவற்றை உடனடியாக செய்வதுடன் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் போதை மீட்பு மையங்களைத் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்