Skip to main content

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு; அரசு விழாவை அதிரவைத்த பள்ளி மாணவி!

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

incident student struggle NEP at the Chief Minister Pharmacies Festival

தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ஒன்றாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மானாமந்தி ஊராட்சி மன்றம் உட்பட்ட பகுதியில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும்  திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன்  (சேர்மன்) உள்ளிட்ட பலர் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். 

நிகழ்ச்சியில் திடீரென மேடையில் ஏறிய இள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மாணவி அமைச்சர் தா.மோ.அன்பரசு முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிடம் 12 ஆயிரத்துக்கான வரைவோலை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் எதற்கு இந்த பணம் வழங்குகின்றீர்கள் என்று அந்த மாணவியிடம் கேட்டதற்கு. ஒன்றிய அரசு முன்மொழிக் கொள்கையை திணிக்க பார்க்கிறார்கள், இதை தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள்.இதனால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் தாமதப்படுத்திக் கொண்டே உள்ளனர்.

இதனால் நான் மேற்படிப்புக்காக சிறு சேமிப்பாக சேர்த்து வைத்திருந்த ரூபாய் 12000  முதல்வர் நிதிக்கு வழங்குகிறேன் என்று மேடையில் கூறியதும் மேடையில் இருந்தவர்கள் மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்து அனைவருமே நெகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா தாயார் செல்வி கூலி வேலை செய்கிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சரண்யா அரசுப் பள்ளியில் நன்றாக படித்து வருபவர் என்பதும் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் கூறினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் மாணவி சரண்யாவை பாராட்டியது மட்டுமல்லாமல் முன்மொழி கொள்கையைப் பற்றி மாணவர்கள் வரை தெரிந்திருக்கிறது என்று ஆச்சரியமடைந்தனர். 

சார்ந்த செய்திகள்