Skip to main content

எட்டு வழிச் சாலை, எண்ணெய் கிணறுகள் அமைப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? மக்களுக்கு விளக்க வேண்டும் - பெ.சண்முகம்

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் கணபதி நகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்  மாநில துணைத்தலைவர்கள் டி. இரவீந்திரன், கே. முகமதுஅலி, பொருளாளர் கே.பி.பெருமாள், செயலாளர்கள் டெல்லி பாபு, சாமி.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

What is the state government's stand on setting up eight way roads and oil wells?

 

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது, "சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து ஏப்.8 ஆம் தேதி நல்லதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது.  குறிப்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இத்தகைய திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தியது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி எந்த திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் தொடங்கக் கூடாது என வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. 


ஆனால் இதற்கு நேர் மாறாக ஏப்ரல் 15ஆம் தேதி சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில், 8 வழிச் சாலை திட்டத்தை திட்டமிட்டபடி அமைத்தே தீருவோம் என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 
 

நீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்ட விவசாயிகள் மத்தியில், மத்திய அமைச்சரின் பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசாங்கம் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும். மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. 
 

விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நடந்து கொண்டால் அதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துவோம். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 28-ஆம் தேதி திருவண்ணாமலையில் எட்டு வழிச்சாலையின் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், நீதிபதி சிவசுப்ரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் கருத்தரங்கம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற உள்ளது. 



காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, ரசாயன மண்டலமாக அறிவித்து தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள்  ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் கொண்டுவர மாட்டோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என அறிவித்தனர். ஆனால் அதற்கு மாறாக சுற்றுச்சூழல் அறிக்கையை ஓஎன்ஜிசி நிறுவனம் தாக்கல் செய்யலாம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் செயலாகும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. மீறினால் அதனை எதிர்த்து ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து  கூட்டு போராட்டம் நடத்தப்படும். 
 

எண்ணெய் கிணறுகள் தோண்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நேரடியாக களத்தில் இறங்கி தடுப்போம். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 
 

பெட்ரோலிய ரசாயன மண்டலம் கரூர்- கோவை 6 வழிச்சாலை, எண்ணெய் குழாய் பதிப்பு, உயர் அழுத்த மின்கோபுரம் என வளர்ச்சி திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். வேதாந்தா நிறுவனமும் இதையே வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பலத்த அடி கொடுக்கும் வகையில்தான் உயர் நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 
 

விவசாயிகளை பாதிக்கக்கூடிய, விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையை பாதிக்கக் கூடிய அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் நில உரிமையை பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடுமையாக எதிர்க்கும்" என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்