Skip to main content

அடிமை ஆட்சிக்கும் - அதை ஆட்டிப்படைக்கும் கொடிய ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்: மு.க.ஸ்டாலின்

Published on 20/04/2018 | Edited on 20/04/2018


அடிமை ஆட்சிக்கும் - அதை ஆட்டிப்படைக்கும் கொடிய ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கவுரிசங்கர் – சீதாலட்சுமி தம்பதியினரின் திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர்,

இன்று தமிழ்நாட்டில் நடக்கும் ‘குதிரை பேர’ அரசு மக்களுடைய ஆதரவுபெற்ற அரசல்ல. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஆட்சி தொடர்கிறது. எந்த நேரத்திலும் இது கவிழும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை, மத்தியில் இருக்கின்ற பிஜேபி அரசு காப்பாற்றிக் கொண்டு வருகிறது. காரணம், அவர்களின் அடிமையாக இந்த ஆட்சி இருப்பதால் காப்பாற்றுகிறார்கள். இன்று திமுக ஆட்சி இருந்திருந்தால், நாம் அடிமையாக இருந்திருப்போமா? நமது உரிமைகளை விட்டுக் கொடுத்திருப்போமா? மாநில சுயாட்சிக்கு பங்கம் வரும் நிலையை அனுமதித்து இருப்போமா? தமிழகத்தில் இப்போதுள்ள கவர்னரின் நிலை என்ன? தமிழ்நாடே வெட்கி தலைகுனியும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியும் சரியில்லை. மத்திய அரசின் பிரதிநிதியாக இந்த ஆட்சியை கண்காணிக்கின்ற ஆளுநரின் நிலை என்ன என்பதையும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெளிவான, உறுதியான, இறுதியான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது. நியாயமாக, மத்திய அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் அந்தத் தீர்ப்பை முன்வைத்து, சட்டமாக்கித் தந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதை செய்யவில்லை. பிரதமர் மோடிக்கும், பிஜேபிக்கும் எடுபிடியாக இருக்கும் எடப்பாடி தலைமையிலான குதிரை பேர அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், காரணம் கர்நாடக அரசு அந்தத் தீர்ப்பை ஏற்க முன்வரவில்லை, எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும், என்று நான் வலியுறுத்தினேன். அதை அவர்கள் செய்ய முன்வராத காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நாம் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

பின்னர் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல்கள், முழு அடைப்புப் போராட்டம் ஆகியவற்றை நடத்தினோம். அதுமட்டுமல்ல, காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தினோம். வரும் 23 ஆம் தேதியன்று எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். பிரதமரை சந்திக்க நேரம் பெறமுடியாத மானங்கெட்ட, அடிமையாக ஒரு முதலமைச்சர் இங்கு இருக்கிறார். எனவே, இங்கிருக்கும் தலைவர்களை எல்லாம் நாம் டெல்லிக்கு அழைத்துச் செல்வோம் என்று முடிவெடுத்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள் நேரம் அளித்தால், முதலமைச்சரையும் சேர்ந்து அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச்செல்ல நான் தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில், அவர்கள் நேரம் தரவில்லை என்றால் நமது போராட்டம் தொடரும்.

ஆகவே, அடிமையாக இங்கு இருக்கின்ற ஆட்சிக்கும், அதை ஆட்டிப் படைக்கும் கொடிய மத்திய ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க, எதிர்வரும் தேர்தலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்