Skip to main content

நம் தரத்தை உயர்த்தும் மொழி தமிழ்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

முதுபெரும் தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வனாருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடந்தது. அவரது  50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்ப் பணியையும், படைப்புப் பணியையும்  பாராட்டும் விதமாக, அவருடைய   முன்னாள் மாணவர்களும் காமராஜர்  கல்வி அறக்கட்டளையினரும்  இணைந்து  இவ்விழாவை நடத்தினர்.

 

Thiruvarurவேலுடையார் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமையில் நடந்த இந்த விழாவில், தமிழறிஞர் ஞானச்செல்வனாரைப்  பாராட்டியப் பேசிய முன்னாள் அரசவைக் கவிஞரும் பாடலாசிரியருமான முத்துலிங்கம் ”தமிழுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் ஞானச்செல்வன்.  தமிழகத்தின் மூத்த தமிழறிஞரான அவர், தமிழாசிரியர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர். தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் செய்தி அறிவிப்பாளர்களுக்கும், தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்தவர். இப்போதும் கூட தமிழைப் பிழையிலாமல் பேசவும் எழுதவும்  பலருக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் .இப்படிப்பட்ட தமிழறிஞர்களால்தான் தமிழன்னை இன்னும் இளமை நலம் குன்றாமல், தன் கட்டுக்கோப்பும்  மரபுத் தன்மையும் மாறாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறாள்.
 

உலகின் தொன்மையான மொழிகளில் தலையாய மொழியாக நம் தமிழ்மொழி திகழ்கிறது. உலகில் இருக்கும் ஆறாயிரம் மொழிகளில், தொன்மைச் சிறப்போடு, தனித்து இயங்கும் வல்லமையோடு தமிழ்மொழி விளங்குகிறது. உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்வது தமிழ்மொழிதான் என்று இன்று உலகளாவிய ஆய்வாளர்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  


 

அப்படிப்பட்ட   தமிழுக்கு இன்று நம் தமிழ்நாட்டிலேயே பலவகையிலும்  ஆபத்துகள் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடப் புத்தகங்களிலேயே, தமிழின் தொன்மைச் சிறப்பைக் குறைத்துக்காட்டும் அளவிற்கு நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய இழிவிலிருந்து தமிழைக் காப்பாற்ற, ஞானச்செல்வனாரைப்  போன்ற அறிஞர்களின் தொண்டு  நமக்குத் துணையாக இருக்கிறது. எனவே தமிழுக்குத் தொண்டாற்றும் ஞானச்செல்வனாரைத் தமிழுலகம் கொண்டாடவேண்டும்.  தமிழக அரசு  அவருக்கு விருதுகளைக் கொடுத்துப் பாராட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


 

ஏற்புரையாற்றிய ஞானச்செல்வனார் ”நம் தமிழ்மொழி ஒழுக்கம் கலந்தமொழி. அதைக் கற்க மறந்ததால் இப்போதைய பிள்ளைகளிடம் ஒழுக்கம் குறைந்துவருகிறது. இங்கே பிறமொழியைப் படிப்பவர்களும் தமிழைக் கற்கவேண்டும். ஏனென்றால் அது படிப்பவர்களின் மனத்தையும் தரத்தையும் உயர்த்தும் தன்மைகொண்டது. நாம் துறைதோறும் தமிழை வளர்க்கப் பாடுபடவேண்டும். நமக்கிடையே எத்தகைய வேற்றுமைகள்  இருந்தாலும், நாம்  உணர்வோடு ஒன்றுபட்டுத் தமிழை வளர்க்கவேண்டும். தமிழ் நம் ஆடையல்ல; அடையாளம்” என்றார்.
 

விழாவில் நகைச்சுவை நாவலர் இரெ.சண்முகவடிவேல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஞானச்செல்வனாரை வாழ்த்திப் பாராட்டினர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் விபத்து; ஒருவர் பலியான சோகம்! 

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Thiruvarur district near Mannargudi Thiranagapuram incident

நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருத்தநாகபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை விஜய செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென இந்த ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் மூன்று பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது ஆலையில் பணியில் ஈடுபட்டு சதீஷ்குமார் என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சாகித்ய அகாடமி விருது; எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Sahitya Akademi Award; CM MK Stalin Greetings 

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய பால புரஸ்கார் விருது மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருது எனச் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட 23 இந்திய மொழிகளில் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான (2024) விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் மொழியில் வெளியான படைப்புகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சால்ட் பதிப்பகம் வெளியிட்ட ‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sahitya Akademi Award; CM MK Stalin Greetings 

இந்நிலையில் இரு எழுத்தாளர்களுக்கும் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பால புரஸ்கார் விருதுக்கும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

Sahitya Akademi Award; CM MK Stalin Greetings 

தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது! வாழ்த்துகள்!. காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புராஸ்கார்  விருதுக்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Sahitya Akademi Award; CM MK Stalin Greetings 

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் மூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கியத்தில் இயங்கிவருபவர் யூமா வாசுகி. அடிப்படையில் ஓவியராக இருந்து இவர் இயற்றிய கவிதைகளும், எழுதிய நாவல்களும் தமிழ்ப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. மலையாளத்திலிருந்து சிறார் கதைகளை மொழிபெயர்த்துவந்த இவர், தனது நேரடி சிறுவர் கதைக்கொத்தான ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்கு, சாகித்ய அகாடெமியின் பால புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இவருக்கும், ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார்.