பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு, பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்கு ஆகியவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிக்கரணையில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சுபஸ்ரீ உயிரிழப்புக்கான இழப்பீட்டை பொறுத்தவரை, அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம், அரசியல் கட்சிகள் சார்பில் ரூ.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை அளித்துள்ள விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சுபஸ்ரீ தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பேனர் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் வரும் 22- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.