
காவிரிக்கு தண்ணீர் வரும் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அபாய எச்சரிக்கை விடப்பட்டும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கடைமடைப் பகுதியான டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கல்லணை கால்வாய் பாசனம் உள்ளது. கல்லணை திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் சில நாட்கள் மட்டும் வந்த தண்ணீர் பாசன குளம் ஏரிகள் நிரமபாமலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசன விவசாயிகள் மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சயர் கணேஷ் மற்றும் கல்லணை கோட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டனர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடைமடைக்கும் பாசனம் பெரும் வகையில் நாகுடிக்கு 300 கனஅடி தண்ணீர் கிடைக்க அதிகாரிகளிடம் பேசுவதாக உத்தரவாதம் கொடுத்தார்.

அதேபோல அதிகாரிகளிடம் பேசினார். ஆனால் அதிகபட்சமாக 160 கனஅடி அளவுக்கே சில நாட்கள் வரை தண்ணீர் வந்து நிறுத்தப்பட்டுள்ளது. கரை பலமில்லை என்று அதிகாரிகள் சொன்னாலும் கல்லனை பாசன கண்காணிப்புக்குழு தலைவர் அருண் ஐ.ஏ.எஸ். கரை பலமாக உள்ளது. 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கலாம் என்று ஆய்வுக்கு பிறகு கூறினார்.
இந்தநிலையில் நாகுடி பகுதி கடைமடை பாசன விவசாயிகள் எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை கல்லணை கால்வாய் கரையோரம் காத்திருக்கப் போகிறோம் என்று அறிவித்தனர். அதன் பிறகும் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்று புதன் கிழமை காலை கல்லணை கால்வாய் அருகில் தினசரி 300 கனஅடி தண்ணீர் கிடைக்கும் வரை காத்திருக்கிறோம் என்று போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இந்த போராட்டத்தில் நாகுடி பகுதி விவசாயிகள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போராடிய விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறும் போது.. மேட்டூர் அணை நிரம்பி வரும் நிலையிலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் தர தமிழக அரசால் முடியவில்லை. இதற்கு காரணம் மராமத்து செய்ததில் செய்த தவறே காரணம்.
தமிழக அரசு இந்த ஆண்டு காவிரி ஆறு, ஏரி, வாய்க்கால் மராமத்துக்கு ரூ.11 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய்க்கு மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளது. நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் பலவீனமாக உள்ள கரைகளை சீரமைக்காமல் நிதியை முறைகேடாக எடுத்துள்ளனர்.

இந்த முறைகேட்டினால் ஆற்றில் தண்ணீர் வரும்போது கரை உடைந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்பதால் தண்ணீர் திறக்க மறுக்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடைமடைக்கு தண்ணீர் சென்றுவிட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. எனவே தமிழக அரசு நாகுடி கடைமடை பகுதிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த போராட்டத்திற்கு திருமயம் தி.மு.க எம்எல்.ஏ ரகுபதி, அறந்தாங்கி அ.ம.மு.க எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி, மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பல அமைப்புகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டம் நாகுடிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் கிடைக்கும் வரை தொடரும் என்றனர் விவசாயிகள்.